Wednesday, July 22, 2009

யுரேனியம்-கருவிகள்: அமெரிக்காவிடம் சரணடைந்த இந்தியா?

டெல்லி: இந்திய அணு உலைகளுக்குத் தரப்படும் எரிபொருள், அதை செரிவூட்ட பயன்படும் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தில் (End-Use Monitoring Agreement-EUMA) இந்தியா ரகசியமாக கையெழுத்திட்டுள்ளது.

அதாவது இந்திய அணு உலைகளுக்குத் தரப்படு்ம் யுரேனியத்தை நாம் மீண்டும் செரிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்துகிறோமா என்பது அமெரிக்க அதிகாரிகள் வந்து சோதனையிட முடியும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் அமெரிக்கா தந்த கருவிகளும் எரிபொருளும் அணு உலைகள் தவிர வேறு எதற்கும் (அணு ஆயுதம் தயாரிக்க) பயன்படுத்தப்பட்டுவிடாமல் இந்த ஒப்பந்தம் தடுக்கும்.

சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும் நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதைப் பற்றி ஹிலாரி டெல்லியை விட்டுக் கிளம்பும் வரை மறைத்துவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஒப்பந்த்தின் மூலம் இந்தியாவி்ன் பாதுகாப்பையே மத்திய அரசு அடமானம் வைத்துவிட்டதாக பாஜக தலைவர் அத்வானியும் இடதுசாரிக் கட்சி எம்பி்க்களும் மத்திய அரசை சாடினர்.

இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமது அணு உலைகளுக்கு எரிபொருள், கருவிகள் சப்ளை செய்யும் அனைத்து நாடுகளும் நமது அணு ஆயுதங்களை பார்வையிட மத்திய அரசு வகை செய்துவிட்டது, அமெரிக்காவி்ன் நிர்பந்தத்துக்கு பணிந்துவிட்டது என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்தார். EUMA ஒப்பந்தம் மூலம் யாரும் நம்மை வந்து கண்காணிக்க முடியாது என்றும், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒரு இடைக்கால ஏற்பாடு தான் இந்த ஒப்பந்தம் என்றும் கூறினார் கிருஷ்ணா.

இந்த ஒப்பந்தத்தை அப்படியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, அமெரிக்காவுக்கு அடிபணிவது இந்த அரசி்ன் வழக்கமாவிட்டது என்றார்.

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையி்ல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை அரசு மறைக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் முன் இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க மறுத்தால், சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு திமுக ஆதரவு..

மக்களவையில் இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதே போல மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சியினருக்கு திமுக ஆதரவாகப் பேசியதால் காங்கிரசார் எரிச்சாயினர்.

கேபினட் கூட்டம் ஒத்திவைப்பு...

இந் நிலையில் நேற்று நடக்கவிருந்த மத்திய கேபினட் கூட்டம் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. கூட்டணிக் கட்சிகளே கோபத்தில் இருப்பதால் இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது

அமெரிக்கா மகிழ்ச்சி..

இதற்கிடையே இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த தனது முதல் அறிக்கையை அதிபர் ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கூறுகையில்,

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் உறவு மேலும் பலப்படுவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. எரிபொருள் சப்ளை, அணு ஆயுத பரவல் தடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

0 comments: