லோக்சபா தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை விட ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் 40 சதவீதம் பேரது விருப்பத்துக்கு மாறாகவே பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, கோடை வெயிலில் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட வேண்டுமா என்ற சோம்பல் தான் முக்கிய காரணங்கள்.
இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.
மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.
கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.
-நன்றி-
தினமலர்
0 comments:
Post a Comment