Saturday, April 11, 2009

"தேர்தல் அறிக்கை"

இரண்டு படங்கள் நடித்து முடித்ததும் புதுக்கட்சி, ஒரு இடைத்தேர்தலைச் சந்தித்த கையோடு முதல்வர் நாற்காலிக் கனவு என்பதே இன்று அரசியல் தத்துவமாகிவிட்டது.
இவர்களிடமிருந்து மக்கள் பெரிதாக என்ன எதிர்பார்க்க முடியும்?
என்ன மாதிரியான தொலைநோக்கு சிந்தனை இவர்களுக்கு இருக்கும்?

பாரதிய ஜனதாவோ, ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள் என்கிறது. இப்படி வரி வருமானத்தில் விலக்குகள் அளிக்கப்படத் தொடங்கினால், அதற்கு ஒரு முடிவே கிடையாதே. வருமான இழப்பு ஒருபுறம்; இலவச வாக்குறுதிகள் மற்றொருபுறம். அரசு செயல்படுவது எங்ஙனம்?

தமிழகத்தில் தொடங்கிய இலவச சைக்கிள் திட்டம், வண்ணத் தொலைக்காட்சி விநியோகம் மற்றும் கிலோ ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்கள் ஏனைய மாநிலங்களின் அரசியல் கட்சிகளால் தேர்தல் நேர வாக்குறுதிகளாக்கப்பட்டிருக்கின்றன.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக நமது அரசியல் கட்சிகள் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசுவதற்குப் பெயர் தேர்தல் அறிக்கை என்றாகிவிட்டிருக்கிறது. எந்தவித செயல்திட்டமோ, கொள்கைப் பிடிப்போ இல்லாமல், எப்படியாவது வாக்காளர்களைக் கவர்ந்து ஆட்சியில் அமர்ந்து விடுவது மட்டும்தான் தங்களது லட்சியம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கத் தொடங்கிவிட்டன.

தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு இலவசம் என்கிற பெயரில் வாரி வழங்கும் வாக்குறுதிகளும் ஒருவகையில் லஞ்சம்தான். இது ஆபத்தின் அறிகுறி!

0 comments: