ஈழத்தில் தினந்தோறும் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் விமானம் மூலம் தமிழ் மக்கள் குண்டுகள் வீசி கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 45 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். இன்னும் எண்ணில்லாத சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் உக்கிரமான போரில் சிங்கள இராணுவத்தால் தமிழினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. கூப்பிடு தூரத்தில் ஆறுகோடி தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டில் வசித்தாலும் தமிழர்களின் குரல் உலகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இல்லையென்றால் அதற்கான முயற்சிகள் யாராலும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்களின் வீரியமிக்கப் போராட்டங்களைத் தவிர்த்து பெரிய அளவிலான எழுச்சி மிக்க போராட்டங்கள் எங்கும் காணப்படவில்லை. முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம், கோகுல் ரத்னம் உட்பட எழுவர் தீயினால் தங்களின் இன்னுயிரை மாய்த்த பின்னும் தமிழகம் மௌனமாய் இருக்கிறது. தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியவில்லை என்ற கையறுநிலையில் தங்கள் மரணமாவது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் உணர்வைத் தட்டி எழுப்புவதற்கு உதவியாக இருக்காதா என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
ஆயுதங்களை அளித்து தமிழினத்தை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் மத்திய அரசின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும், அதற்கான போராட்டத்தில் தமிழினம் அணிதிரளவேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேற அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தங்கள் கடமையை மிக அதிக அளவில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களின் மரணத்தை வைத்து போராட்டத்தை வழி நடத்த வேண்டிய தலைவர்கள் தங்களின் கடமையை சரிவரச் செய்யாததேயாகும்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கும், அதில் இடம்பெற்றிருக்கிற தலைவர்களுக்கும், ஈழத்தமிழர் நலனைவிட தங்களின் சொந்த அரசியல் நலனே மேலோங்கி நிற்கிறது. விடுதலைப்புலிகளின் பிரச்சார பீரங்கியாகத் திகழும் வைகோ மகிந்த இராஜபக்சேவின் குரலாக ஒலிக்கும் ஜெயலலிதாவின் காலடியில் நின்று ஈழத்தமிழர் நலன் பற்றிப் பேசுகிறார். கருணாநிதியின் ஈழத் தமிழருக்கு எதிரான துரோகத்தை நீட்டி முழங்கும் வைகோ மறந்தும் கூட ஜெயலலிதாவின் துரோகத்தைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. சோனியா காந்தியின் மந்திரி சபையில் பதவி வகித்துக் கொண்டு காங்கிரசின் துரோகத்தைப் பற்றி அதிகம் பேசாமல் தன்மீதான விமர்சனக் கணைகளை லாவகமாக கருணாநிதியின் பக்கம் திருப்பிவிட்டு அரசியல் செய்கிறார் இராமதாஸ். மத்திய அரசின் துரோகத்தைப் பற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குரலில் பேசும் திருமாவளவன் மத்திய அரசின் துரோகத்தில் பங்கு வகிக்கும் கருணாநிதிக்கு எதிராக மறந்தும் பேச மறுக்கிறார். மதவாத பா.ஜ.க.வோ ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களை அழிக்கும் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அடியற்றி தனது கொள்கைகளை வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் கோ¤க்கைகளை ஒப்புக்கு வலியுறுத்திப் பேசி அதன் மூலம் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாதா என்று வாய்ப்பு தேடுகின்றது. அவர்களையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு ஈழத் தமிழர் நலனுக்காக போராடுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் மிகக் குறைந்த விழுக்காட்டு அளவே உள்ள குஜ்ஜார் இன மக்கள் தங்கள் வீரியமிக்க போராட்டத்தின் மூலம் ஒரே வாரத்தில் இந்தியாவையே தங்கள் பக்கம் திரும்ப வைத்தனர். தங்கள் கோரிக்கைகளையும் வெற்றிகரமாக ந¤றைவேற்றிக் கொண்டனர். அத்தகைய போராட்டத்தை நாம் தற்பொழுது நினைவில் கொள்ள வேண்டும்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செத்துப்போன ராஜீவ்காந்தியின் மரணம் இன்று வரை வெற்றிகரமாக அவர்களால் அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அறுவரின் மரணமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இவ்வாறு யாருடைய உழைப்பும் இல்லாமல், யாருடைய அணிதிரட்டலும் இல்லாமல் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இயல்பாய எழுந்த மக்கள் எழுச்சி, சரியான வழிகாட்டுதலும், முன்னெடுத்தலும் இல்லாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருக்கிறது. பற்றி எரிய வேண்டிய தமிழகம் சருகாகக் கிடக்கின்றது. எழுவர் பற்றி வைத்த தீயை தலைவர்கள் விழலுக்கு இரைத்த நீராக மாற்றிவிட்டார்கள்.
ஆகவே இனிமேலாவது போராட்டங்களை சடங்காகச் செய்வதை நிறுத்திவிட்டு உலகத்தின் கவனம் நம்மீது திரும்பும் வகையில் நடத்த வேண்டும். இல்லையென்றால் கண்முன் இனம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் மௌன சாட்சிகளாக நாமும் இருப்போம்.!
நன்றி
கீற்று .com
Monday, April 13, 2009
உங்கள் கவனத்திற்கு!
Posted by BHARATHAMAINTHAN at 7:57 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment