சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?
பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம்.......
போட்டியாய் குண்டு வீசும் விமானக் கூட்டம்....
பிறந்தவுடன் எறிக்கணைக்கு
விருந்தாகும் பிஞ்சுக்குழந்தைகள்.........
பதுங்குகுழிகள் தான் பஞ்சு மெத்தை....
பாதி இறப்புகள் தான் குண்டுவீச்சுக் கணக்கு...
மீதி இறப்புகள் பட்டினியின் கணக்கு........
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆலமரம் போல வளர்ந்த இனம் , இன்று
அக்கினிக்கு இறையாகும் அவலமென்ன?
காடு செதுக்கி , பூமி செதுக்கி
கழனியாக்கி சோறு போட்டோம்.
சொல்லால் இனிமை காட்டி
வில்லால் வீரம் காட்டி
நெல்லால் பசி போக்கி
அல்லல் தீர்த்து வைத்தோம்........!
கல்லணையைக் கட்டினானாம் ,
இமயத்தைக் கொண்டானாம்,
கங்கையைக் கொண்டானாம் ,
கலிங்கத்துப் பரணியுண்டாம்,
முறத்தினில் புலி விரட்டினாளாம் ,
போர் வா மகனே போருக்கு என்று
போர்பரணி பாடினாளாம் ...............!
வீரத்தின் விளைநிலமாம்........
வீரவாஞ்சிநாதனும் பிறந்தானாம்.........
சாவளங் கண்டானாம்....
சாவுக்கு அஞ்சானாம்.....
கண்ணகி இருந்தாளாம்.அவள்
கண்ணசைவில் மதுரை எரிந்ததுவாம்.......
இத்துணை கதைகள் உண்டாம்
எம் வீரத் தமிழினம் பற்றி........
அவையாவும் நாற்பது நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்காக மறக்கப்பட்டதாம்...
இதுவும் வரலாறு...ச்சீ
இதுவா வரலாறு?? அய்யகோ
இதுவா தமிழினம்?
இந்தத் தமிழினத்தைக் காக்கவா எம்
இன்னுயிரை பறிகொடுத்தோம்?இந்தி திணிப்பிற்கே
தாங்கமாட்டா தமிழினம் இன்று
தாங்கவொண்ணா துயரம் கண்டும் சும்மா இருப்பதுவேன்?
அம்மா முடியலையே என்று சிறு குழந்தை
அழுவதை மறந்தது ஏன்?
சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?
தமிழாய்ப் பிறந்து ,
தமிழால் வளர்ந்து ,
தமிழுக்காய்ப் போராடி ,
தமிழுக்கே இரையானோம்..........
தமிழுக்கே இரையாவோம்.........!
ஆம் , தமிழுக்கே இரையாவோம்.
நன்றி - மதிபாலா பதிப்பகம் -
Saturday, April 4, 2009
தமிழுக்கே இரையாவோம்.ஆம் , தமிழுக்கே இரையாவோம்.!
Posted by BHARATHAMAINTHAN at 4:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment